அரசியல்

ராகுல் காந்தி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் !

top-news


**சென்னை:**
ஜனநாயகத்தைக் காக்கும் வகையில், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது அவசியம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்:
"சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற *‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’* புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, நம் நாடு முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு அரசியலமைப்புச் சட்டம் மதிக்கப்பட வேண்டும், இதற்கான பொறுப்பும் கடமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதையும் வலியுறுத்தினேன். ஜனநாயகத்தின் ஆணிவேர், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் (Free and Fair Election) என்பதை அப்போதே உறுதியாகக் கூறினேன். அத்துடன், தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு, அனைவருக்கும் நம்பிக்கை தரும் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியவுடன், அந்த நடைமுறை ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிலிருந்து முதன்முதலாகக் குரல் எழுப்பியதும் தமிழக வெற்றிக் கழகமே.

எனவே, ஏற்கனவே நாம் வலியுறுத்தியபடி, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில், ஜனநாயகத்தைக் காக்கும் பொருட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தேர்தல் நடத்தும் முறையில் வெளிப்படைத்தன்மை, நீதி, மக்களின் நம்பிக்கை ஆகியவை நிலைத்து நிற்கும் வகையில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.