அரசியல்

'விலையில்லா மடிக்கணினி': தாமதத்தை கண்டித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி!

top-news

அம்மா அரசின் விலையில்லா மடிக்கணினி திட்டம் (Amma Laptop Scheme), ஏழை மாணவர்களின் கல்விக்கும், தொழில் வழிகாட்டியாகவும் உதவியதை, பயனடைந்த இளைஞர்களைச் சந்தித்தபோது அறிந்து மகிழ்ந்ததாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தற்போதைய தி.மு.க. ஆட்சியில் நான்கரை ஆண்டுகளாக மடிக்கணினிகள் வழங்கப்படாததால், அரசுப் பள்ளி மாணவர்களின் விஞ்ஞானக் கல்வி தடைபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

"தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும் அரங்கேற்றப்படும் நாடகம்" எனக் குறிப்பிட்ட அவர், தற்போது கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும், கல்வி ஆண்டின் நடுவில் லேப்டாப் வழங்குவதன் நோக்கம் என்ன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "இன்றைய AI காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. பொம்மை முதல்வரைப் போன்றே பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஸ்டாலின் மாடல் அரசு?" என்றும் வினவினார்.


தேர்தலுக்காக கண் துடைப்பு நாடகம் ஆடுவதற்கும், கல்வி மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து லேப்டாப் வழங்கிய அ.தி.மு.க.விற்கும் வித்தியாசம் உண்டு என அவர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். நான்கரை ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட மாணவர்கள் #WhereIsOurLaptop என்று கேட்பதாகவும், இதற்கு ஸ்டாலின் உரிய பதில் அளிப்பாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.