இந்தியா

அமெரிக்க வரிவிதிப்பு விவகாரம்: புதினுடன், மோடி தொலைபேசியில் ஆலோசனை

top-news

**புதுடெல்லி:** அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கையை முன்னிட்டு, உலக நாடுகளின் தலைவர்கள் இடையே முக்கிய ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி, பல்வேறு சர்வதேச மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். இதில், அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான விவகாரமும் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அரசு, இந்தியாவுக்கு விதித்தது போலவே, தென் அமெரிக்காவின் முக்கிய நாடான பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது. இதனால், அந்த நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இருதரப்பு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடல் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்ததாக கூறப்படுகிறது.

மோடி மற்றும் லூலா இடையேயான பேச்சுவார்த்தையிலும், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு கொள்கை குறித்து விரிவாக பேசப்பட்டு, அதனால் உருவாகும் பொருளாதார விளைவுகள் மற்றும் அதை எதிர்கொள்வதற்கான கூட்டுச் செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தகவலறிந்த வட்டாரங்களின் கூற்றுப்படி, இந்த விவகாரத்தில் இந்தியா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.