இந்தியா

டெல்லியில் பயங்கரம்: செங்கோட்டை மெட்ரோ அருகே கார் வெடிவிபத்து; 8 பேர் பலி – தேசியப் புலனாய்வு விரைவு!

top-news

புது டெல்லி: தலைநகர் புது டெல்லியிலுள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் (கேட் எண் 1) அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6.55 மணியளவில் சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தலைநகரையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.


8 பேர் பலி, உயிரிழப்பு அச்சம்
வெடிவிபத்தின் காரணமாக அருகிலிருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவல்களின்படி, சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான நிலையில், அருகில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் தற்போதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. மேலும், காயமடைந்தவர்கள் பலர் உள்ளதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெடிவிபத்து சம்பவத்தின்போது அடுத்தடுத்து மூன்று முறை பயங்கரமான சத்தங்கள் கேட்டதாக அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீப்பிடித்த வாகனங்களின் தீயை அணைத்தனர். டெல்லியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்ஐஏ விசாரணை: உள்துறை அமைச்சகம் தகவல் கேட்டது
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி காவல்துறையிடம் முதற்கட்ட தகவல்களைக் கேட்டுள்ளது. தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, வெடிவிபத்துக்கான காரணத்தையும், இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் கண்டறிய தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் டெல்லி மக்களிடையே மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.