இந்தியா

ரஃபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம்!

top-news

அம்பாலா: இந்தியக் குடியரசுத் தலைவரும், முப்படைகளின் தலைமைத் தளபதியுமான திரவுபதி முர்மு அவர்கள் இன்று (அக்டோபர் 29, 2025) அரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படைத் தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் வெற்றிகரமாகப் பயணித்தார். இதன் மூலம், அதிநவீன ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.


முப்படைகளின் தலைமைத் தளபதியின் பயணம்
இன்று காலை அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, விமானப் படை வீரர்கள் மரியாதை அளித்தனர். பின்னர் அவர் விமானப் படை பைலட் அணிந்துள்ள உடைகளைப் போலவே ஜி-சூட் அணிந்து, சன் கிளாஸ், ஹெல்மட் சகிதம் விமானத்தில் பயணிக்கத் தயாரானார். சரியாக முற்பகல் 11.27 மணியளவில் விமானம் புறப்படுவதற்கு முன், அவர் விமானத்துக்குள் இருந்து கையசைத்தார்.

குடியரசுத் தலைவர் பயணித்த இந்த ரஃபேல் போர் விமானத்தை, விமானப் படையின் 17வது ஸ்குவாட்ரனான 'கோல்டன் அர்ரோஸ்'ஸின் குரூப் கேப்டன் அமித் கெஹானி இயக்கினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தப் பயணம், இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறனை ஜனாதிபதி நேரடியாக உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தது.

இரண்டாவது சாகசம்
போர் விமானத்தில் ஜனாதிபதி முர்மு பயணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், ஏப்ரல் 8, 2023 அன்று, அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படைத் தளத்தில் அவர் சுகோய்-30 MKI ரக போர் விமானத்தில் சாகசப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் மூலம், இரண்டு வெவ்வேறு ரக போர் விமானங்களில் பயணித்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

மேலும், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்களான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (2006) மற்றும் பிரதிபா பாட்டில் (2009) ஆகியோரும் சுகோய்-30 MKI ரக போர் விமானங்களில் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.