புதுடெல்லி: டெல்லியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் ஈடுபட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்களில் பெண்களின் சமத்துவத்தைப் பேணும் வகையிலும், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், டெல்லி துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுடன், டெல்லி அரசின் தொழிலாளர் துறை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய நிபந்தனைகள்:இந்த அனுமதி சில கடும் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விதிமுறைகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் ஊழியர்களின் பாதுகாப்பைக் காப்பது நிறுவனங்களின் கட்டாயக் கடமையாகிறது.கட்டாய எழுத்துப்பூர்வ ஒப்புதல்: இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலை நிறுவனம் கட்டாயம் பெற வேண்டும். எந்தவொரு ஊழியரையும் இரவுப் பணிக்கு மட்டுமே கட்டாயப்படுத்தக் கூடாது.பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து: ஊழியர்களைப் பணிக்கு அழைத்து வரவும், பணி முடிந்ததும் பாதுகாப்பாகத் திரும்ப அனுப்பவும் போதுமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.
சிசிடிவி கண்காணிப்பு: பணியிடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகளைக் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்குக் கட்டாயம் பராமரிக்க வேண்டும். தேவைப்படும்போது தலைமை ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பணி நேரம் மற்றும் ஊதியம்: ஒரு பெண் ஊழியர் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேலும் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.தொடர்ந்து 5 மணி நேரத்துக்கு மேல் இடைவெளி இன்றி வேலை செய்யக் கூடாது.கூடுதல் நேர வேலைக்கு (Overtime) இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
புகார் குழு (ICC): பணியிடங்களில், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம், 2013-இன் படி, உள் புகார் குழுக்கள் (Internal Complaints Committee - ICC) கட்டாயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மதுபானக் கடைகளுக்குத் தடை:இந்தப் புதிய விதிமுறைகளின்படி, மதுபானம் விற்கும் கடைகளில் மட்டும் பெண்கள் இரவுப் பணி செய்வதற்குத் தொடர்ந்து தடை நீடிக்கும்.பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பணியிடச் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.


