இந்தியா

காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான மாநாடு...பிரதமர் மோடிக்கு அழைப்பு ...!

top-news

புதுடெல்லி: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், காசா பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எகிப்தில் நடைபெறும் உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா - எகிப்து கூட்டுத் தலைமை:

எகிப்தின் புகழ்பெற்ற ஷர்ம்-எல்-சேக் (Sharm El-Sheikh) நகரில் திங்கட்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் இந்த முக்கிய மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தில் பத்தா அல்-சிசி ஆகியோர் இணைந்து தலைமை தாங்க உள்ளனர்.

பிரதமருக்கு அழைப்பு:

20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ள இந்த அமைதி உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பிரதமர் அலுவலகம் (PMO) அவரது பங்கேற்பை உடனடியாக உறுதி செய்யவில்லை.

மாநாட்டின் நோக்கம்:

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவது.

காசா பகுதியில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது ஆகிய இலக்குகளுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை பிரதமர் மோடி ஏற்கனவே வரவேற்றிருந்த நிலையில், அமைதி நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பை வெளிப்படுத்த இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு:

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாடுகளின் முயற்சியால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை முதல் ஹமாஸால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளும் தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சண்டைப் பகுதி அல்லாத இடங்களிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.