புதுடெல்லி: நாடு முழுவதும் மின்சார விநியோகத் துறையில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கும் வழிவகை செய்யும் வகையில், மத்திய அரசு மின்சார சட்டம் 2003-ல் முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவரும் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய மின்சார அமைச்சகம் "மின்சார திருத்தச் சட்டம் 2025" என்ற பெயரில் இந்த வரைவு அறிக்கையை வடிவமைத்துள்ளது. இதன் முதன்மை நோக்கம், மின்சார விநியோக உரிமங்களை வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஒரே விநியோகப் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் விநியோக நிறுவனங்கள் செயல்பட அனுமதிப்பதாகும்.
முக்கிய சட்டத்திருத்தங்கள்: தனியார் விநியோக நிறுவனங்களுக்கு அனுமதி: தற்போதுள்ள சட்டத்தின்படி, விநியோக நிறுவனங்கள் தங்கள் சொந்த கட்டமைப்பின் மூலம் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. புதிய வரைவு, இந்த நிபந்தனையை நீக்கி, ஒரு பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனத்தின் விநியோக கட்டமைப்பைப் பயன்படுத்தி, மற்றொரு தனியார் நிறுவனம் மின்சாரம் வழங்க வழிவகை செய்கிறது.
கட்டமைப்புப் பகிர்வு: நெட்வொர்க் வைத்திருக்கும் விநியோக நிறுவனங்கள், தங்கள் கட்டமைப்பை நியாயமான கட்டணத்துடன், பாகுபாடின்றி மற்ற நிறுவனங்களுக்கும் பயன்படுத்த வழங்க வேண்டும்.
தேசிய மின்வாரியம்: மத்திய மின்துறை அமைச்சர் தலைமையில் தேசிய மின்வாரியம் (National Power Board) அமைக்கப்படும் என்றும், அதில் மாநில மின்சாரத்துறை அமைச்சர்கள் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என்றும் இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, மாநில அரசுகளின் பிரதிநிதித்துவத்துடன் மின்சாரத் துறையில் ஒருங்கிணைந்த முடிவுகளை எடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோருக்குத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அளிக்கவும், மின் விநியோக நிறுவனங்களின் நிதி நிலையை வலுப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரைவுபடுத்தவும் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வரைவு அறிக்கை குறித்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.
எதிர்ப்புகள்: இந்தச் சட்டத் திருத்தமானது, லாபம் ஈட்டும் பகுதிகளில் மட்டும் தனியாரை அனுமதித்து, சேவைப் பொறுப்பில் உள்ள அரசு நிறுவனங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும் என்று கூறி, அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு (AIPEF) உள்ளிட்ட சில அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.


