இந்தியா

இந்தியா - இங்கிலாந்து உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு

top-news

மும்பை: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, 126 முக்கிய தொழில்முனைவோர் அடங்கிய மிகப்பெரிய வர்த்தகக் குழுவுடன் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ளார்.

வர்த்தக உறவு வலுப்பெற ஆலோசனை:

இரு தலைவர்களின் முன்னிலையில் உயர்மட்டக் குழுவினரின் சந்திப்பு நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கல்வி, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

"இந்தியா - இங்கிலாந்து இயற்கையான கூட்டாளிகள்" - பிரதமர் மோடி:

சந்திப்புக்குப் பிறகு, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள்" என்றும், இரு நாடுகளின் வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகளாவிய நிலைத்தன்மைக்கு ஒரு முக்கிய அடித்தளமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.