இந்தியா

கைவிடப்பட்ட 12 மணி நேர வேலை திட்டம்.. எதிர்ப்புக்கு பணிந்த கர்நாடக அரசு !

top-news

**பெங்களூரு:** கர்நாடகாவில் தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை (ITES) துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட்டது. தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு மற்றும் தொடர் போராட்டத்துக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கர்நாடகாவில் உள்ள விதிப்படி ஊழியர்கள் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 10 மணி நேரம் (ஓவர்டைம் உட்பட) பணியாற்ற அனுமதி உள்ளது. ஆனால், கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருத்த மசோதா-2025 மூலம், இந்த வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்த அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், நிறுவனங்களில் 2 ஷிப்ட்கள் மட்டுமே போதுமானதாகி, ஊழியர்கள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைய வாய்ப்பு இருப்பதாக தொழிற்சங்கங்கள் வாதிட்டன. இது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என்றும், பணியாளர்களின் உழைப்பு சுமை கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இந்த முடிவுக்கு எதிராக கர்நாடகா ஐடி ஊழியர்கள் சங்கம் (KITU) உட்பட பல தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடத்தி, 12 மணி நேர வேலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தின.

தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் ஜி. மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தொழிற்சங்கங்களின் கருத்துக்களை கேட்டு, நிலைமையை ஆய்வு செய்த பிறகு, 12 மணி நேர வேலை திட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்தார்.

தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூட இந்த திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். இந்த அறிவிப்புக்கு பிறகு KITU மற்றும் பிற தொழிற்சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்தன. இது தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும், அரசு எடுத்த இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்தும் தொழிற்சங்கங்கள் அறிக்கை வெளியிட்டன.