இந்தியா

டார்ஜிலிங் நிலச்சரிவில் குறைந்தது 20 பேர் பலி.. பூடானில் அணை உடைந்து வெள்ள அபாயம்!

top-news

மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கோரத் தாண்டவத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவு பாதிப்பு:

பிரபல சுற்றுலா தலமான டார்ஜிலிங் மற்றும் மிரிக் துணைப் பிரிவுகளில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் பல மண்ணோடு மண்ணாகத் தரைமட்டமாயின. சுகியா போக்ரி, மிரிக் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாலசான் ஆற்றின் குறுக்கே இருந்த டூடியா இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததால், சிலிகுரி மற்றும் மிரிக் இடையேயான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சுற்றுலாப் பயணிகள் உட்படப் பலர் சிக்கித் தவிப்பதாகவும், சிக்கிம் மாநிலத்துடனான சாலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பூட்டான் அணை நீர் திறப்பால் வெள்ள அபாயம்:

இதற்கிடையில், மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள அண்டை நாடான பூட்டானில் பெய்துவரும் தொடர் கனமழையால், சுக்ஹா மாவட்டத்தில் உள்ள தலா நீர்மின் அணைக்கட்டு (Tala Hydropower Dam) கதவுகள் திறப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அணை நிரம்பி வழிவதாகவும், கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதாகவும் பூட்டான் தேசிய நீரியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் (NCHM) மேற்கு வங்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், வடக்கு வங்காளத்தில் உள்ள டீஸ்டா மற்றும் ஜல்தகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அபாய கட்டத்தை எட்டியுள்ளது. ஆற்றோரப் பகுதிகளுக்கும், தாழ்வான பகுதிகளுக்கும் அதிகபட்ச எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு, வடக்கு வங்க மாவட்ட நிர்வாகங்கள் அதிகபட்ச தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நிலச்சரிவு பாதிப்புகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (அக்டோபர் 6) நேரில் பார்வையிட உள்ளார்.