ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் (கைரேகை, கண் கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உயர்த்தியுள்ளது.
இதன்படி, பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வதற்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண உயர்வின் விவரம்:
தற்போது வரை, ஆதார் மையங்களில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அக்டோபர் மாதம் முதல், இந்தக் கட்டணம் ரூ.25 உயர்த்தப்பட்டு, இனி ரூ.125 வசூலிக்கப்படும்.
அதே சமயம், பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் போன்ற பிற மக்கள் தொகையியல் (Demographic) விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.50 ஆக தொடர்ந்து இருக்கும்.
யாருக்குக் கட்டணம் இல்லை?:
புதிய கட்டண உயர்வு குறித்த அறிவிப்பில், புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு (New Enrolment) எந்தவித கட்டணமும் பொருந்தாது என்று UIDAI தெளிவுபடுத்தியுள்ளது. புதிய ஆதார் பெறுவது இலவசமாகவே இருக்கும்.
மேலும், 5 முதல் 7 வயது வரையிலும், 15 முதல் 17 வயது வரையிலும் உள்ள குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் செய்வதும் எப்போதும் போல இலவசமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களுக்கு எந்தச் சலுகைக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் சேவை மையங்களில் இந்த புதிய கட்டணங்கள் குறித்த அறிவிப்பை பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்துமாறு UIDAI அறிவுறுத்தியுள்ளது.


