இந்தியா

இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் தங்குவதற்கு சட்டபூர்வ அனுமதி

top-news

**டெல்லி:** இந்தியாவில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்து வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு பெரிய நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை உள்நாட்டுப் போரின் காரணமாக தங்கள் நாட்டை விட்டு வெளியேறி, அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள், பல ஆண்டுகளாக சட்ட சிக்கல்கள் மற்றும் நிரந்தர வாழ்வுரிமை தொடர்பான குழப்பங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்திய உள்துறை அமைச்சகம் அவர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட சட்ட சலுகையை வழங்கியுள்ளது.

அதன்படி, **2015 ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவுக்குள் உரிய ஆவணங்களின்றி நுழைந்து, அரசின் பதிவில் அகதிகளாக இணைந்த இலங்கைத் தமிழர்கள், இனி சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்** என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, விசா அல்லது பிற பயண ஆவணங்கள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டாலும், அவர்களுக்கு எந்த வித தண்டனையும் வழங்கப்படாது எனவும் உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது, அகதிகள் மீது விதிக்கப்படும் வழக்குகள் மற்றும் தண்டனைகளிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க முடிவாகக் கருதப்படுகிறது.

அதேவேளை, தாமாக முன்வந்து தாயகமான இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளுக்கான விசா கட்டணங்கள், இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைக் கடந்து தங்கியிருந்ததற்கான அபராதங்களையும் மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், திரும்பிச் செல்ல விரும்புவோருக்கு எந்தத் தடைகளும் இல்லாமல் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட **குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டங்களில் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது** குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை அகதிகள் நல்வாழ்வு அமைப்புகள் வரவேற்று வருகின்றன. பல ஆண்டுகளாக சட்ட சிக்கல்களில் சிக்கியிருந்த அகதிகளின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் எனவும், இந்திய அரசின் இந்த முடிவு மனிதாபிமானத்தின் அடிப்படையில் எடுத்துள்ளது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.