இந்தியா

பிரதமர் மோடி ஜப்பான் பயணம்: உச்சி மாநாட்டில் பங்கேற்பு

top-news

டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடி, 15-வது இந்தியா - ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். டோக்கியோவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின்போது, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்துப் பேசுகிறார்.

இந்த மாநாட்டில், இரு நாடுகளின் உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீனாவுக்குப் புறப்படுகிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்படப் பல உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு உலக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. டோக்கியோ வந்தடைந்ததும், பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில், "இந்தியாவும், ஜப்பானும் தங்கள் வளர்ச்சி ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணத்தின் போது பிரதமர் இஷிபா மற்றும் பலரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஏற்கனவே உள்ள கூட்டாண்மைகளை ஆழப்படுத்தவும், ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என்று பதிவிட்டிருந்தார்.