புதுடெல்லி: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், கர்மவீரருமான பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைகள் மற்றும் படங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கே.காமராஜ் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்த அவர், தனது வாழ்வை தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தவர்.
கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, எதிர்கால தலைமுறைகளுக்கு இன்றும் வழிகாட்டியாக திகழ்கிறது."
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் பெருந்தலைவர் காமராஜரின் சேவைகளைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார்.



