**பாட்னா:** பிஹாரில் நடைபெற்றுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதன் மூலம் வாக்கு திருட்டு நடைபெறுவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறைகேடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பு என்றும், தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
**மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் குற்றச்சாட்டுகள்**
இந்த முறைகேடுகளை எதிர்த்து, பிஹார் முழுவதும் 16 நாட்கள் பேரணி நடத்தி வரும் ராகுல் காந்தி, நேற்று அரரியா மற்றும் புர்னியா பகுதியில் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், "அரசியலமைப்பு சட்டம் ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்ற உரிமையை வழங்குகிறது. ஆனால் பிஹாரில் லட்சக்கணக்கான ஏழைகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்கள் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. இது அப்பட்டமான வாக்குரிமைப் பறிப்பு" என்று தெரிவித்தார்.
மேலும், "தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுகிறது. வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியின் மூலம் பிஹாரில் வாக்கு திருட்டு நடந்துள்ளது. அனைத்து கட்சிகளும் இதை எதிர்க்கும் நிலையில், பாஜக மட்டும் மௌனம் காத்து வருகிறது. இது பாஜகவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே உள்ள ரகசிய கூட்டணியை காட்டுகிறது" என்று ராகுல் காந்தி கூறினார்.
மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குறிப்பிட்ட அவர், இப்போது பிஹாரிலும் இது நடப்பதாகச் சுட்டிக்காட்டினார். "பிரதமர் நரேந்திர மோடி வாக்கு திருட்டில் ஈடுபடுகிறார். இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்தார்.
**பாதுகாவலரால் தாக்கப்பட்ட இளைஞர்**
புர்னியா பகுதியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியின்போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. ராகுல் காந்தி மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டிச் சென்றபோது, கூட்டத்தில் இருந்து திடீரென நுழைந்த ஒரு இளைஞர், ராகுலின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராகுலின் பாதுகாவலர், அந்த இளைஞரை ஓங்கி அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
**திருமணம் குறித்து ராகுல், தேஜஸ்வி யாதவ் நகைச்சுவை**
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் விமர்சனம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேஜஸ்வி, "சிராக் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, அவர் என் மூத்த அண்ணன் போன்றவர். அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு நான் அறிவுறுத்துகிறேன்" என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி, "இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும்" என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.


