இந்தியா

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி நீட்டிப்பு !

top-news



**புதுடெல்லி:**
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி தொடங்கிய இனமோதல்கள், மாநிலத்தையே பெரும் பதற்றத்திற்குள் தள்ளியது. மைத்தேயி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே வெடித்த இந்த மோதல், ஒருசில நாட்களில் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வை புரட்டிப் போட்டது. இதுவரை கிடைத்த தகவலின்படி, மோதல்களால் 250 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் நிர்வாகத் தேவை காரணமாக, குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானத்தை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ன் கீழ் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி, வரும் ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றம் வழங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஆரம்ப நிலையாக 6 மாதங்கள் செல்லும். ஆனால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொரு 6 மாதத்துக்கும் புதிய தீர்மானம் மூலம் இது தொடர்ந்து நீட்டிக்கலாம். இது அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை நீடிக்கப்படலாம்.

மணிப்பூரின் தற்போதைய சூழ்நிலைகள், தொடர்ந்து மைய அரசின் கண்காணிப்பில் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதி நிலைமை மையமாகக் கொண்டு, மாநிலத்தில் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில அரசின் இயலாமை மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையின் பின்னணியில் இந்த நீட்டிப்பு அமலாகியுள்ளது. மக்கள் வாழ்வாதாரமும், மீள்நிர்மாண நடவடிக்கைகளும் தகுந்த கவனத்துடன் முன்னெடுக்கப்படும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.