இந்தியா

மக்களவை: 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் நாளை ரத்து? - சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை

top-news

புது தில்லி: நாடாளுமன்ற மக்களவையில் பல்வேறு காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த 8 உறுப்பினர்களின் இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ முன்மொழிவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாளை (மார்ச் 17) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் அவையில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த முன்மொழிவு ஏற்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட 8 உறுப்பினர்களும் மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

சமீபத்திய கூட்டத்தொடர்களில் அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த அறிவிப்பு வெளியானவுடன், அந்த 8 உறுப்பினர்களும் உடனடியாகப் பணியைத் தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.