இந்தியா

தமிழ்நாட்டில் ஏப்.23 ம் தேதி தேர்தல்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

top-news

 தமிழ்நாட்டில் 2026  ம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்நிலையில், புதுதில்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.
    ஐந்து மாநில தேர்தல்களில் மொத்தம் 17 புள்ளி 4 கோடி வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
  தகுதிவாய்ந்த ஒரு வாக்காளர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கத்தில், எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டதாகவும் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
  தமிழ்நாட்டில் மே 10 ம் தேதியுடன் சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23 ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஞானேஸ் குமார் அறிவித்தார்.
  வாக்குப்பதிவின் சதவீதம், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தெரிவிக்கப்படும் என்றும் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் குறிப்பிட்டார். 
  தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 30 ம் தேதி தொடங்குகிறது.
    வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் ஆறாம் தேதி நிறைவடைகிறது.
   வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல்  7 ம் தேதியும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசிநாள் ஏப்ரல் 9 ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.