புது தில்லி: இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணப் பரிவர்த்தனையை முழுமையாகத் தவிர்க்கும் நோக்கில் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் செலுத்த ஃபாஸ்டேக் (FASTag) மற்றும் யுபிஐ (UPI) முறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கப் பரிவர்த்தனைக்கு முற்றுப்புள்ளி: சுங்கச்சாவடிகளில் நிலவும் வாகன நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைச் சேமிக்கவும் ரொக்கமாக (Cash) கட்டணம் செலுத்தும் முறை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட உள்ளது.
டிஜிட்டல் மயம்: ஃபாஸ்டேக் கணக்கில் போதிய இருப்பு இல்லாதவர்கள் அல்லது ஃபாஸ்டேக் செயலிழந்து இருப்பவர்கள், உடனடியாகத் தங்களது செல்போன் மூலம் UPI (GPay, PhonePe, Paytm) வாயிலாகக் கட்டணத்தைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை: இந்த டிஜிட்டல் முறை மூலம் கட்டண வசூலில் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்றும், காகிதப் பயன்பாடு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


