புதுடெல்லி: அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைத் துப்பாக்கியால் சுடுவது போன்ற சர்ச்சைக்குரிய அனிமேஷன் வீடியோ தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
சர்ச்சை வீடியோ: அஸ்ஸாம் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளங்களைக் கொண்ட நபர்களையும், காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயையும் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
பரபரப்பு: இந்த வீடியோ "இனப்படுகொலைக்குத் தூண்டுவது போல் உள்ளது" என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டாலும், அதன் தாக்கம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மனுதாரர்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை நாளை விசாரிக்க உள்ளது. முன்னதாக இது குறித்துக் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, "தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல் போர்க்களங்கள் நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுகின்றன" என்று குறிப்பிட்டிருந்தார்.
முக்கிய கோரிக்கைகள்:
முதல்வரின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் மற்றும் வீடியோ தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்பவர்கள் இது போன்ற வெறுப்புணர்வைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.
அஸ்ஸாமில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


