இந்தியா

குளியலறையில் வழுக்கி விழுந்து ஜார்கண்ட் மாநில அமைச்சர் உயிரிழப்பு !

top-news



ராஞ்சி: ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான ராம்தாஸ் சோரன் (62) திடீரென காலமானதால், மாநிலம் முழுவதும் துக்க சூழல் நிலவுகிறது.

கடந்த 2ம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் ராம்தாஸ் சோரன் கடுமையான காயங்களுக்கு உள்ளானார். அவரை முதலில் ஜாம்ஷெட்பூரில் சிகிச்சை அளித்த பின்னர், சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி நகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இச்செய்தி வெளியாகியதும், மாநில அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் துயரம் பரவியது. அவரது உடல் நேற்று விமானம் மூலம் ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள சட்டமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது இரங்கல் பதிவில், *“ராம்தாஸ் சோரனின் மறைவு நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநில அரசியல் துறையில் அவர் வகித்த பங்கு என்றும் நினைவுகூரப்படும். அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கக் கூடாது”* எனக் குறிப்பிட்டார்.

அவரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறவுள்ளதாகவும், மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்தாஸ் சோரன் கல்வி துறையில் பல புதுமையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு, ஜார்கண்ட் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.