இந்தியா

ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் பேரணி !

top-news

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் முறைகேடு மற்றும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் இன்று (ஆக.11) டெல்லியில் பெரிய அளவிலான போராட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தின் ‘மகர் துவார்’ பகுதியில் இருந்து, நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அமைதியான பேரணியாக செல்ல முயன்ற அவர்கள், டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் பல இடங்களில் தடுப்புகள் அமைத்திருந்ததால், மூத்த தலைவர்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்திலேயே இருந்து போராட்டத்தை தொடர்ந்தனர். பேரணியின் போது, திரிணமூல் எம்.பி மிதாலி பாக் மயக்கம் அடைந்ததால் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பேரணியின் நோக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
“பீகார் மாநிலத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் உள்ளன என்று நாங்கள் கருதுகிறோம். இதைப் பற்றியும், பிற தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பாணையை நேரடியாக வழங்க விரும்பினோம். அதற்காக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அமைதியான பேரணியை நடத்தினோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் அடிப்படையே இங்கு பாதிக்கப்படுகிறது” என்றார்.

இந்த சம்பவத்தால், இண்டியா கூட்டணியின் தேர்தல் ஆணைய எதிர்ப்பு போராட்டம், நாடாளுமன்ற வளாகத்திலேயே தீவிரமடைந்துள்ளது.