பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மாநிலத்தில் நடத்திய சிறப்பு தீவிர திருத்தத்தில், 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. விசாரணையின் போது, ஆதார் எண், ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களை இருப்பிட ஆதாரமாக பரிசீலிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.
கடந்த 1ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் நீக்கப்பட்டவர்கள், புதிதாக சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆகிய அனைத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த சூழலில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
* வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் என்ற சட்டப்பூர்வ கட்டாயம் இல்லை.
* வரைவு பட்டியலில் சேர்க்கப்படாதவர்களின் தனிப்பட்ட பட்டியலை வெளியிட முடியாது; அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
* எந்த காரணத்தாலும் கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படாத நபர்களின் பூத் அளவிலான பட்டியலை அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து, அவர்களை தொடர்புகொள்வதில் அந்தக் கட்சிகளின் உதவியை நாடியுள்ளோம்.
* வரைவு பட்டியல் வெளியான பிறகு, சேர்க்கப்படாத வாக்காளர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
இதன் மூலம், நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


