இந்தியா

இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது: அமெரிக்க வரி நடவடிக்கைக்கு ராஜ்நாத் சிங் பதிலடி !

top-news

புதுடெல்லி: அமெரிக்கா-இந்தியா இடையேயான வரி தகராறு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், “இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதித்திருப்பது, இரண்டு நாடுகளுக்குமிடையே பொருளாதார பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் ரைசன் பகுதியில் அமைக்கப்பட உள்ள ரயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியா தொடர்ந்து மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றம் உலகின் சில சக்திவாய்ந்த நாடுகளுக்கு விருப்பமல்ல. இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க, சிலர் விலை உயர்வு போன்ற யுக்திகளை கையாளுகின்றனர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையை செயற்கையாக அதிகரித்து, அவற்றின் சர்வதேச சந்தை போட்டித்திறனை குறைக்க முயற்சி செய்கின்றனர். இதன்மூலம், பிற நாடுகள் இந்திய பொருட்களை வாங்குவதை தவிர்த்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், இத்தகைய முயற்சிகள் வெற்றியடையாது.

இந்தியா வல்லரசாக மாறும் பாதையில் தன்னம்பிக்கையுடன் நகர்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. குறிப்பாக, பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக, அவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தான் இந்தியாவின் உண்மையான பலம்” என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங்கின் இந்தக் கருத்துகள், இந்தியாவின் பொருளாதார சுயமரியாதையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உலக அரங்கில் தனது இடத்தை வலுவாக நிலைநிறுத்தும் நாட்டின் உறுதியையும் வெளிப்படுத்துகின்றன.