பெங்களூரு: இந்திய உணவுப் பழக்கங்களில் தனி இடத்தைப் பிடிக்கும் முருங்கைக்காய்க்குக் கிராமப்புறங்களில் தனி மவுசு உண்டு. எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் முருங்கைக்காய், சாம்பார் மற்றும் பிறக் குழம்பு வகைகளில் கட்டாயம் இடம்பெறும். கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், தற்போது தலைநகர் பெங்களூருவில் முருங்கைக்காயின் விலை அதன் வரம்புகளை மீறி உச்சத்தை அடைந்துள்ளது. முருங்கைக்காயின் விலையைக் கேட்டால், பலருக்கும் தலைசுற்றும் அளவிற்குப் பீதி ஏற்படுகிறது.
விலை விவரம்: பெங்களூருவில் உள்ளச் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் காய்கறிச் சந்தைகளில் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை ₹180 முதல் ₹200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு, சாம்பார் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பற்றாக்குறை: இந்தப் பெரிய விலை உயர்வுக்கு முக்கியக் காரணம், கர்நாடகாவின் முக்கிய முருங்கைக்காய் உற்பத்திப் பகுதிகளான சித்ரதுர்கா, பெங்களூரு புறநகர்ப் பகுதிகள் மற்றும் சில தமிழகப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த அதிக கனமழையும், மோசமான வானிலையும் ஆகும்.
விளைச்சல் பாதிப்பு: கனமழையால் முருங்கைச் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரும் முருங்கைக்காயின் வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால், தேவை அதிகரித்த நிலையில், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முருங்கைக்கீரையின் நிலை: முருங்கைக்காயின் விலை உயர்ந்திருப்பதன் காரணமாக, முருங்கைக்கீரையின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள், அடுத்த ஒரு மாதத்திற்கு முருங்கைக்காயின் வரத்து சீராகவில்லை என்றால், இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


