சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான 'பைசன் - காளமாடன்' திரைப்படத்தை, தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்த்துப் பாராட்டியுள்ளார். ஒரு கிராமத்து இளைஞனின் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியிருப்பதாக அவர் படக்குழுவினரைப் புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் முக்கிய அம்சங்கள்:
அண்ணாமலை வெளியிட்ட பதிவு:
"அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, 'பைசன் - காளமாடன்' திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.
அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் திரு. மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார். சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகனின் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகன் துருவ், இந்தப் படத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் பசுபதி, லால் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்."
கபடி வீரரின் உண்மை வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி வருவது, திரையுலக வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.


