கொச்சி/திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் ஐ.டி. ஊழியர் ஒருவரைக் கடத்தித் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், நடிகை லட்சுமி மேனன்னுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் (பார்) இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கும், ஐ.டி. ஊழியர் உட்பட மற்றொரு குழுவுக்கும் இடையே மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
மோதலைத் தொடர்ந்து, ஐ.டி. ஊழியர் ஒருவரை லட்சுமி மேனனின் நண்பர்கள் தங்கள் காருக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றி, கடத்திச் சென்று தாக்கியதாக கொச்சி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகையின் நண்பர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டதையடுத்து, அவர் தலைமறைவானார்.
முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?
தன்னை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு கேட்டு நடிகை லட்சுமி மேனன் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் இடையே இருந்த பிரச்சனை சமரசம் ஆகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சமரசம்: ஐ.டி. ஊழியர் தரப்பில், "தவறான புரிதலின் காரணமாகவே புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால், நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை" என்று உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு: இதையடுத்து, இருதரப்பினரும் சமரசம் செய்துகொண்டதைக் கருத்தில் கொண்டு, நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதன் மூலம், ஆட்கடத்தல் மற்றும் தாக்குதல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தபோதும், புகாரளித்த தரப்பே சமரசம் செய்துகொண்டதால், நடிகை லட்சுமி மேனன் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாகத் தப்பித்துள்ளார்.
தமிழில் 'கும்கி', 'சுந்தரபாண்டியன்', 'வேதாளம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து லட்சுமி மேனன் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


