**சென்னை:** தமிழ் திரையுலகில் தனித்துவமான கதை சொல்லலால் ரசிகர்களை கவர்ந்துவரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன், தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற *'பேட் கேர்ள்'* திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், படத்தினைப் பற்றிய விவரங்களை பகிர்ந்ததோடு, தயாரிப்பாளராக இருந்து வரும் அழுத்தங்கள் காரணமாக இனி தயாரிப்பு நிறுவனத்தை நடத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், *"தயாரிப்பாளராக இருப்பது நிறைய சவால்களையும், அழுத்தங்களையும் தருகிறது. இயக்குநராக இருப்பது ஒப்பீட்டளவில் சுலபம். இயக்குநர் வேலையை நன்றாகச் செய்தால் போதும். ஆனால் தயாரிப்பாளராக இருந்தால், படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் கருத்துக்களும், எங்களின் செயல்பாடுகளும் நேரடியாக வணிகத்தை பாதிக்கிறது. அதனால் மிகுந்த ப்ரஷராக மாறுகிறது,"* என்றார்.
அவர் தொடர்ந்து, \*"ஏற்கனவே *‘மனுஷி’* என்ற படம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கிருந்து தீர்ப்பு வந்துள்ளது, அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். *‘பேட் கேர்ள்’* படமும் மறுதணிக்கை வரை சென்று சான்றிதழ் பெற்றுள்ளது. டீஸரை பார்த்தபின் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். ஆனால் படம் அவர்கள் நினைப்பது போல் இல்லை. ஒரு படத்தை யார் பார்க்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தணிக்கை குழுவுக்கு உண்டு. அந்தக் குழு *‘பேட் கேர்ள்’* பார்த்துவிட்டு U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது.
*‘மனுஷி’* படமும் பல தணிக்கை சிக்கல்களைச் சந்தித்து, நீதிமன்றம் வரை சென்றது. எனவே என்னைப் போன்ற ஆட்களுக்கு தயாரிப்பாளராக இருப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அதனால் தான், *‘பேட் கேர்ள்’* தான் எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரும் கடைசி படம். அதன் பின் அந்த நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளேன்,"\* என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.
திரையுலகில் இயக்குநராக அவர் தொடர்ந்து செயல்பட்டாலும், தயாரிப்பாளராக இனி இருக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு, தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


