சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் விளம்பர பணிகள் மாநிலம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். அங்கு ‘மதராஸி’ படத்தின் பிரச்சார நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
அந்த சந்திப்பின் போது மாணவர்களும் ரசிகர்களும் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “எனது வாழ்க்கையிலும், சினிமா பயணத்திலும் மிகப்பெரிய ஊக்கமாக இருப்பவர் ரஜினி சார். அவரைப் பார்த்ததால்தான் எனக்கு சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவருடைய நடிப்பே சினிமாவுக்கு வர வேண்டும் என்ற கனவை எனக்கு தந்தது. அவருடைய குரலை பின்பற்றி பேசினேன். அதற்காகவே கைதட்டல்கள், வாய்ப்புகள், வாழ்வு என பலவற்றை பெற்றேன். எனக்கான ஆதர்சம் என்றுமே ரஜினி சார் தான்” என்று தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, உடனடியாக கொச்சிக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அங்கும் ‘மதராஸி’ பட விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டு ரசிகர்களை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் ஹைதராபாத்திலும் பிரச்சார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
விளம்பரப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின், இறுதிக்கட்டமாக சென்னை நகரில் படக்குழுவினர் முழுமையாக பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. அங்கு படத்தின் சிறப்புகள், திரையரங்கு வெளியீட்டு திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.


