சினிமா

விஜய் ரசிகர்களை நான் பிடிக்க நினைப்பதாக சொல்கிறார்கள்: எஸ்கே பரபரப்பு பேச்சு

top-news

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் **‘மதராஸி’** செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்த நிலையில், டிரெய்லர் வெளியிடப்பட்டதும் பெரும் வரவேற்பை பெற்றது.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “முருகதாஸ் சார் படங்கள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு பேட்டியில் அவர், ‘மதராஸி’ படத்தின் கதையை முதலில் ஷாருக்கானிடம் கூறியதாக சொன்னார். அப்படியொரு கதையை, எஸ்ஆர்கே செய்ய வேண்டியிருந்த நிலையில், அதை இப்போது நான் செய்யும் வாய்ப்பு கிடைத்ததே எனக்கு மிகப்பெரிய விஷயம். கதையின் முதல் பாதி சொன்னவுடன் எனக்கு மிகுந்த உற்சாகம் வந்துவிட்டது. அந்தக் கதையிலிருந்த உட்கருத்து என்னை மிகவும் கவர்ந்தது,” என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து, “படப்பிடிப்பில் முருகதாஸ் சார் மிகவும் எளிமையாக நடந்துகொண்டார். ஒரு ஹீரோவுக்கு தரவேண்டிய மரியாதையை மிகச்சரியாகக் கொடுத்தார். அதனால்தான் அவர் இன்னும் டாப் இயக்குநராக இருக்கிறார். இப்படத்தில் வேலை செய்த அனுபவம் எனக்கு மறக்க முடியாத ஒன்று,” எனக் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட ‘கோட்’ பட அனுபவத்தையும் பகிர்ந்தார். “விஜய் அண்ணனுடன் நடித்தபோது, அவர் துப்பாக்கியை என்னிடம் கொடுக்கும் காட்சிக்குப் பிறகு, என்னைக் ‘குட்டித் தளபதி, திடீர் தளபதி’ என்று சொன்னார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. விஜய் அண்ணன் அந்த உணர்வோடு இருந்திருந்தால், துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன். நான் அவர் ரசிகர்களை பிடிக்க நினைத்ததாகச் சொன்னார்கள். ஆனால் ரசிகர்களை யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்,” என்று உணர்ச்சியோடு பேசினார்.

இசை வெளியீட்டு விழாவில், அனிருத் இசையில் உருவான பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதும் ரசிகர்கள் ஆரவாரமாய் கைத்தட்டினர். அனிருத்–சிவகார்த்திகேயன் இணைப்பு ரசிகர்களிடம் எப்போதும் பிரபலமாய் இருப்பதால், ‘மதராஸி’ படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மதராஸி’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிரெய்லரும் பாடல்களும் வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.