சினிமா

நீண்ட ஓய்விற்கு பின்னர் நடிக்க தயாரானார் மம்மூட்டி !

top-news

சென்னை : மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் மம்மூட்டி, கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் ரசிகர்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியிருந்தார். தமிழிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர் மம்மூட்டி. *மறுமலர்ச்சி*, *தளபதி*, *ஆனந்தம்*, *கிளிப்பேச்சு கேட்கவா* உள்ளிட்ட படங்களில் அவர் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில், மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி–மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது மம்மூட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் பரவலாக செய்திகள் வெளியானது. இதனால் ரசிகர்களும், திரைத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சமீபத்திய தகவலின்படி மம்மூட்டி சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருவதாகவும், விரைவில் மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி வெளியாகியதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினரிடையே மகிழ்ச்சி அலை பெருகியுள்ளது.

நடிகர் மோகன்லால், மம்மூட்டிக்கு அன்புடன் முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்து, எந்தவித எழுத்துகளுமின்றி தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல நடிகை மஞ்சு வாரியர், “டைகரை மீண்டும் வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், பிரபல இயக்குநர் சிபி மலயில், “இந்தச் செய்தியைக் கேட்க நான் பிரார்த்தனை செய்தேன்” என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

எனினும், மம்மூட்டிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்த துல்லியமான தகவல்கள், அவரது தரப்பில் இருந்து இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், அவர் மீண்டும் ஆரோக்கியமாகத் திரும்பி வருகிறார் என்ற செய்தி, ரசிகர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது.