ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் “ஸ்ரீசக்தி” எனும் பெயரில் கடந்த வாரம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவால் தொடங்கப்பட்டிருந்தது. மகளிர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்தத் திட்டத்தை, தனது தொகுதியான இந்துப்பூரில், புகழ்பெற்ற தெலுங்கு நடிகரும் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான என். பாலகிருஷ்ணா சிறப்பாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆட்சியர் அபிஷேக் குமார் தேசியக் கொடியை அசைத்தார். அதனைத் தொடர்ந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பாலகிருஷ்ணா நேரடியாக பேருந்து ஓட்டுநரின் இருக்கையில் அமர்ந்து, பேருந்தை இயக்கினார்.
பேருந்தில் ஏறிய பெண் பயணிகள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் உற்சாகம் அடைந்தனர். பொதுமக்களும், ரசிகர்களும் கூடிவந்து "ஜெய் பாலையா!" என கோஷமிட்டனர். பேருந்து நிலையத்திலிருந்து சவுடேஸ்வரி காலனியில் உள்ள தனது இல்லம் வரை, பாலகிருஷ்ணா தானே பேருந்தை ஓட்டி சென்றார்.
இந்த அசாதாரண காட்சிகள் அங்கு இருந்தவர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டன. சில நிமிடங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவியதால், பாலகிருஷ்ணாவின் இந்த நடவடிக்கை வைரலாக மாறியுள்ளது.
அவரது அரசியல், திரைத்துறை ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் பகிர்ந்து வருவதால், இந்துப்பூர் நகரமே தற்போது பேசுபொருளாகியுள்ளது. பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர்-எம்எல்ஏ பாலகிருஷ்ணா நேரடியாக பேருந்து ஓட்டிய காட்சி மக்கள் மனதில் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


