சினிமா

7 ஆண்டுகளுக்கான தமிழக அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, நயன்தாராவுக்கு விருது!

top-news

சென்னை: தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகளை தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகளும், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகளும் இதில் அடங்கும். இந்த விருதுகளை வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.


திரைப்படத் துறையில் சிறந்த நடிகர்களாக 2016-ஆம் ஆண்டுக்கு விஜய் சேதுபதியும் (புரியாத புதிர்), 2017-ஆம் ஆண்டுக்கு கார்த்தியும் (தீரன் அதிகாரம் ஒன்று), 2018-ஆம் ஆண்டுக்கு தனுஷும் (வடசென்னை) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக ஆர். பார்த்திபனும் (ஒத்த செருப்பு), 2020-ஆம் ஆண்டுக்கு சூர்யாவும் (சூரரைப் போற்று), 2021-ஆம் ஆண்டுக்கு ஆர்யாவும் (சார்பட்டா பரம்பரை), 2022-ஆம் ஆண்டுக்கு விக்ரம் பிரபுவும் (டாணாக்காரன்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகையர் பிரிவில் நயன்தாரா (அறம்), கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, மஞ்சு வாரியர் (அசுரன்), அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ் மற்றும் சாய் பல்லவி (கார்கி) ஆகியோர் அந்தந்த ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெறுகின்றனர். சிறந்த திரைப்படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம் மற்றும் கார்கி ஆகிய படங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

சின்னத்திரை பிரிவில் 2014 முதல் 2022 வரை ஒளிபரப்பான சீரியல்களில் அழகி, ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், நந்தினி, செம்பருத்தி மற்றும் எதிர்நீச்சல் உள்ளிட்ட தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நடிகைகளாக ராதிகா சரத்குமார், வாணி போஜன் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் கௌரவிக்கப்பட உள்ளனர்.

விருது பெறுபவர்களுக்கு தலா 5 பவுன் தங்கப் பதக்கமும், சிறந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்குப் பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளன. மேலும், எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும் இதனுடன் அறிவிக்கப்பட்டுள்ளன.