சினிமா

ரஜினியின் 'கூலி' திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

top-news


சென்னை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் ஆமிர்கான் சிறப்பு கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட படம் ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது.

படத்தின் காப்புரிமையை பாதுகாக்கும் நோக்கில், சன் பிக்சர்ஸின் அங்கமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சார்பில், ‘கூலி’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ‘கூலி’ படத்தை எந்த இணையதளம், ஓடிடி தளம் அல்லது கேபிள் டிவி வாயிலாகவும் அனுமதி இல்லாமல் வெளியிடக் கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்டெல், ஹாத்வே, டாடா, வோடோபோன், ரிலையன்ஸ் உள்ளிட்ட 36 இணைய சேவை வழங்குநர்களும், தனியார் கேபிள் டிவி நிறுவனங்களும் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம், படத்தின் வெளியீட்டுக்கு முன்பும் பின்னும் ‘கூலி’ சட்டவிரோத பதிவிறக்கம் மற்றும் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் வலுப்பெற உள்ளன.