7 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆதார் அட்டையில் கட்டாய பயோமெட்ரிக் பதிவுகளை (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) மேற்கொள்வதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுமார் ஆறு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண விலக்கு குறித்த விவரங்கள்:
யாருக்கு விலக்கு: 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு.
காலக்கெடு: அக்டோபர் 1, 2025 முதல் ஒரு வருட காலத்திற்கு, அதாவது செப்டம்பர் 30, 2026 வரை இந்தக் கட்டண விலக்கு அமலில் இருக்கும்.
பொதுவான விதி: UIDAI விதிகளின்படி, பொதுவாக 7 முதல் 15 வயது வரையிலான பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கு ₹125 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அந்தக் கட்டணமே தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் அவசியம் ஏன்?
குழந்தைகளின் ஆதார் தரவுகளின் நம்பகத்தன்மையைப் பராமரிப்பதற்காக, UIDAI இரண்டு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்களைக் கட்டாயமாக்கியுள்ளது.
முதல் புதுப்பித்தல் (First MBU): குழந்தை 5 முதல் 7 வயதுக்குள் அடையும்போது ஒருமுறை.
இரண்டாம் புதுப்பித்தல் (Second MBU): குழந்தை 15 முதல் 17 வயதுக்குள் அடையும்போது ஒருமுறை.
ஏற்கெனவே, 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான கட்டாயப் புதுப்பித்தல்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தற்போது, 7 முதல் 15 வயது வரையிலான இடைப்பட்ட காலத்திலும் பயோமெட்ரிக் அப்டேட்டுகளை ஊக்கப்படுத்தவும், நிலுவையில் உள்ள பதிவுகளைக் குறைக்கவும் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
UIDAI-இன் இந்த முடிவால், 5 முதல் 17 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் தற்போது கட்டணமின்றி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் பெற்றோர் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பிள்ளைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த அப்டேட்டுகள் செய்யப்படாவிட்டால், சில சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும், ஆதார் எண் செயலிழக்க நேரிடலாம் என்றும் UIDAI எச்சரித்துள்ளது.


