ரயில் டிக்கெட் முன்பதிவு அமைப்பின் (PRS) பயன்களை உண்மையான பயணிகளைச் சென்றடையச் செய்வதற்கும், முறைகேடுகளைத் தடுப்பதற்கும், இந்தியன் ரயில்வே இன்று (அக்டோபர் 1) முதல் புதிய நடைமுறை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது ஏற்கெனவே கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த நடைமுறை பொதுவான ரயில் டிக்கெட் முன்பதிவுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொது முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட ஐஆர்சிடிசி பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்ய முடியும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு, ஆதார் இணைக்காத மற்ற பயனர்களும் வழக்கம் போல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
குறிப்பு: ரயில் நிலைய கவுண்டர்கள் மூலம் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இந்த ஆதார் சரிபார்ப்பு விதி பொருந்தாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்களுக்கான கட்டுப்பாட்டு நேரம் (முதல் 10 நிமிடங்கள்) மாறாமல் தொடரும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய விதி, அடிக்கடிப் பயணம் செய்வோர் மற்றும் குறிப்பிட்ட ரயில்களில் டிக்கெட் கிடைக்க வழிவகை செய்ய விரும்பும் உண்மையான பயணிகளுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முறைகேடான கணக்குகளின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.


